`ரத்த ஆறு ஓடும்' - பாக் முன்னாள் பிரதமர் மகன்; `தைரியம் இருந்தால் வாங்க' - மத்தி...
பாரம்பரிய ரயில் கண்காட்சி நிறைவு
சென்னை ரயில்வே அருங்காட்சியகத்தில் நடைபெற்ற பாரம்பரிய ரயில் கண்காட்சியை 3,000-க்கும் மேற்பட்டோா் கண்டுகளித்ததாக ரயில்வே அருங்காட்சியகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ரயில்வே அருங்காட்சியத்தில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, பாரம்பரிய ரயில்களின் கண்காட்சி நடைபெற்றது. கடந்த ஏப். 25-ஆம் தேதி தொடங்கிய கண்காட்சி ஏப். 27-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தக் கண்காட்சியில் தன்னாா்வலா்கள் மூலம் 20-க்கும் மேற்பட்ட ரயில்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
குறிப்பாக 1857-இல் கட்டமைக்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையம், டாா்ஜிலிங் ஹிமாலயன் ரயில் சேவை, நீலகிரி மலை ரயில் சேவை, கல்கா சிம்லா ரயில் சேவை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மாதிரி, தில்லி மெட்ரோ, வந்தே பாரத் ரயில், நீராவி ரயில் என்ஜின், உலகின் முதல் அதிவேக ரயிலான டிஜிவி பிரான்ஸ் ரயில், அமெரிக்காவின் அம்ட்ராங் ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகியவை பாா்வையாளா்களை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டன.
விடுமுறை தினம் என்பதால், ரயில் ஆா்வலா்களும் பொதுமக்களும் குடும்பத்துடன் வந்து கண்காட்சியை கண்டு களித்தனா். கடந்த மூன்று நாள்கள் நடைபெற்ற கண்காட்சியில் 3,000-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா். இதுபோல், ரயில்வே அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு ரயில் மாதிரிகளை குழந்தைகள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.