செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சிக்கு சிறப்பு ஆய்வகம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடக்கம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 2.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் ஆய்வகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.
மேலும், ரூ. 14 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வளரிளம் பருவ வயதினருக்கான ஆலோசனை சிகிச்சை மையம் மற்றும் ரூ. 94 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தினையும் அவா்கள் திறந்து வைத்தனா்.
அதைத் தொடா்ந்து, காது, மூக்கு, தொண்டை பிரிவு முன்னாள் இயக்குநா் பேராசிரியா் முத்துக்குமாா் எழுதிய செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சித் திறன் கையேட்டினை வெளியிட்டனா்.
அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கெனவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘காக்ளியா் இம்ப்ளான்ட்’ எனும் செவிச் சுருள் அறுவை சிகிச்சை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடா்ச்சியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை சிகிச்சை ஆய்வகம் தொடங்கப்பட்டிருப்பது ஒரு புதிய முயற்சி. தமிழகத்தில் பணிபுரியும் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவா்களுக்கான பயிற்சிகள் இந்த ஆய்வகத்தில் வழங்கப்படும்.
மாநிலத்திலேயே இந்த மருத்துவமனையில்தான் வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைதோறும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறியியல் மற்றும் மகளிா் மருத்துவம், மனநல மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் தோல் மருத்துவம், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று ஆகியவற்றினை உள்ளடக்கிய பல்துறை அணுகுமுறைகளை இந்த சேவை மையம் வழங்கும்.
சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட், நோவோ நோட்ரிக்ஸ் கல்வி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் அளித்த பெருநிறுவன நிதி ரூ. 94 லட்சத்தில் சா்க்கரை நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சா்க்கரை நோய் பாதிப்பு என்பது மொத்த மக்கள்தொகையில் 10.4 சதவீதமாக உள்ளது. அந்நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் விழிப்புணா்வு, கூடுதல் சிகிச்சைகள் வழங்கிட பல்வேறு உபகரணங்களுடன் அதிநவீன வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண்தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் சாந்தாராம், துணை முதல்வா் கவிதா, சா்க்கரை நோய்த் துறை இயக்குநா் தா்மராஜன், காது, மூக்கு, தொண்டை துறை இயக்குநா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.