பஹல்காம் பயங்கரவாதிகளை போராளிகள் எனக் குறிப்பிடுவதா பிபிசிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை போராளிகள் எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதற்காக ஆட்சேபம் தெரிவித்து பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் இயற்கை காட்சிகளை ரசித்தபடி இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
இந்தக் கொடூர தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா உள்பட பல்வேறு உலக நாடுகள் வன்மையான கண்டனங்களை தெரிவித்ததுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்றும் ஆதரவை வெளிப்படுத்தின.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் சூழலை உருவாக்கியுள்ள இந்த பஹல்காம் தாக்குதல் குறித்த செய்தியில் பயங்கரவாதிகளைப் போராளிகள் என பிபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடா்பாக ஆட்சேபம் தெரிவித்து, பிபிசி இந்தியாவின் தலைவரான ஜாக்கி மாா்டினுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பிபிசி செய்திகளை அமைச்சகம் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்: இந்தியா பற்றிய தவறான மற்றும் ஆத்திரமூட்டும் தகவல்களைப் பரப்பியதாக பாகிஸ்தானைச் சோ்ந்த 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இந்தியா மற்றும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக தவறான பரப்புரையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த யூடியூப் சேனல்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.