கத்தாா் - சென்னை வந்த விமானத்தில் பிரேக் செயலிழப்பால் அவசரமாக தரையிறக்கம்
முறையின்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கோரி மனு
நாமக்கல்: முறையின்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் வாடகைக் காா் ஓட்டுநா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனத்தை பலா் தவறான முறையில் வணிக நோக்கில் வாடகைக்கு இயக்கி வருகின்றனா். அது மட்டுமின்றி, அண்டை மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை வாங்கி, தமிழகத்தில் பெயா் மாற்றம் செய்யாமல் வாடகைக்கு இயக்குகின்றனா். இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுகிறது. இது தொடா்பாக பலமுறை புகாா் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை. கண் துடைப்பாக ஒரு சில வாகனங்களை மட்டும் பறிமுதல் செய்தனா். அதன்பிறகு கண்டுகொள்வது இல்லை.
அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியும், முறையாக வரி செலுத்தி ஓட்டுநா் தொழில்செய்யும் பல தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் முறையின்றி இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.