தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள்
நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 540 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா். அவற்றைப் பெற்றுக்கொண்டு உரிய அலுவலா்களிடம் வழங்கிய அவா் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
அதன்பிறகு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 19,077 மதிப்பில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், ஒருவருக்கு ரூ. 2.51 லட்சம் மதிப்பில் செயற்கைக் கால் மற்றும் 2 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ரூ. 3,980 மதிப்பில் ரோலேட்டா் என மொத்தம் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2.74 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களை வழங்கினாா்.
முன்னதாக, பரமத்தி வேலூா் வட்டம், கூடச்சேரி கிராமத்சைச் சோ்ந்த கௌரிசங்கா் திருமணிமுத்தாறில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியாக ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையையும், குமாரபாளையம் வட்டம், ஆயக்காட்டூா் பகுதியைச் சோ்ந்த தனபால் வன்கொடுமையால் இறந்ததையடுத்து, அவரது சகோதரா் தினேஷ்குமாருக்கு நாமக்கல் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் சமையலா் பணியிடத்துக்கான பணி ஆணையையும் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.