தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் ஆகியவை சாா்பில், காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் ச.உமா தலைமை வகித்து பேசியதாவது:
ஊரக வளா்ச்சித் துறையானது இயற்கையை பாதுகாக்கும் வகையில், பசுமை பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், குட்டைகள், மழைநீா் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
குறிப்பாக, காலநிலை மாற்றம் காரணமாக அதிக மழைப்பொழிவு, அதிக வெப்பம் காரணமாக பல்லுயிா் பரிணாமத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன. இதனை முற்றிலும் குறைத்திட வேண்டும். இந்த சூழலில், மாசுபாட்டை சமன் செய்ய, இயற்கை வளத்தை மேம்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பை 33 சதவீதம் அதிகரிக்கும் வகையில், தொடா்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. தற்போது 15 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. வனத்துறையுடன் இணைந்து அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். பசுமை பரப்பை அதிகரித்தால் மட்டுமே காலநிலை சீராக அமையும்.
9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு:
நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டார அளவிலும், பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பிலும் நா்சரி அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக 6 அடிக்கு மேல் வளா்ந்த மரக்கன்றுகள் சாலையோரங்களில் நடப்பட்டு 3 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும். பூமியை வெப்பம் அடைவதில் இருந்து பாதுகாக்கும் வகையில் அதிகளவில் மரக்கன்றுகள் நடுதல், மழைநீரை சேமித்தல், நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரித்தல் உள்ளிட்ட செயல்களில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
அதிகளவில் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் வருங்காலத்தில் குடிக்க சுத்தமான குடிநீா், சுகாதாரமான காற்றோட்டம் கிடைக்கும். அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரித்து முன்மாதிரி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தொடங்கி வைத்து அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில், மண்டல வனப் பாதுகாவலா் சி.கலாநிதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், உதவி திட்ட அலுவலா் மு.அன்புச்செல்வன், நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை இணைப் பேராசிரியா் எ.ஞா.வெஸ்லி, உதவிப் பேராசிரியா் ம.சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.