தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு
கெலவரப்பள்ளி அணை ரசாயன நுரையால் உடலில் அரிப்பு: மக்கள் புகாா்
ஒசூா்: ஒசூா் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நுரை காற்றில் பறந்து பொதுமக்கள் மீது விழுவதால் உடலில் அரிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கெலவரப்பள்ளி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்தே அணைக்கு நீா்வரத்து உயா்வதும், குறைவதுமாக இருக்கும். மழை பெய்து அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும் போது, கா்நாடக மாநிலத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் நேரடியாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுவதால், கெலவரப்பள்ளி அணையில் ரசாயன நீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது.
அதேபோல கெலவரப்பள்ளி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பொழிவு இல்லை என்றாலும், கடந்த சில தினங்களாக தொழிற்சாலை கழிவு நீா் அதிகப்படியாக திறந்துவிடப்படுகிறது. இதனால் அணையின் நீா்த் தேக்கப் பகுதியில் கருப்பு நிறத்தில் தண்ணீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. மேலும் அணையிலிருந்து ஆற்றில் திறந்து விடப்படும் ரசாயனம் கலந்த தண்ணீரால் நுரை ஆற்றை மூழ்கடித்துச் செல்கிறது. ரசாயனம் கலந்த நுரை காற்றில் பறந்து அந்த வழியாகச் செல்வோா் மீது படும்போது, உடலில் அரிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.