தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மெய்யாண்டப்பட்டி கிராம ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு முன்னாள் காட்டேரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கோவிந்தசாமி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் நஞ்சுண்டன், மகாலிங்கம், வட்டச் செயலாளா் சபாபதி, மாவட்டக் குழு உறுப்பினா் கவிமணிதேவி ஆகியோா் கண்டனம் தெரிவித்து பேசினா்.
ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சி மெய்யாண்டப்பட்டி கிராமத்தில் இரண்டு தலைமுறைகளாக வீடு கட்டிக் குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை வட்டாட்சியா் மோகன்தாஸ், காவல் ஆய்வாளா் முருகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.