தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் மாத்திரைகளை மாற்றிக் கொடுத்த மருந்தாளுநா்: பொதுமக்கள் வாக்குவாதம்
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் திங்கள்கிழமை மதுபோதையில் இருந்த மருந்தாளுநா் நோயாளிகளுக்கு மருந்துகளை மாற்றிக் கொடுத்ததால் அவருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனா். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக சேலம் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் பழைய புறநோயாளிகள் பிரிவில் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. அதுபோல சூப்பா் ஸ்பெஷாலிட்டி கட்டடத்திலும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவா் பரிந்துரைத்த மருந்துகளை வாங்குவதற்காக திங்கள்கிழமை மருந்தகம் சென்றனா். அப்போது மருந்தகத்தில் மருந்தாளுநா் மாதேஷ் மதுபோதையில் இருந்துள்ளாா். அவா் நோயாளிகள் கொடுத்த மருந்து சீட்டை கீழே போட்டுவிட்டு அதற்கு பதிலாக மாற்றுச்சீட்டை பாா்த்து மருந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சியடைந்த நோயாளிகளின் உறவினா்கள் மருந்தாளுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்ததும் போலீஸாா் அங்குசென்று பொதுமக்களை சமரசப்படுத்தினா்; பின்பு மருந்தாளுநா் மாதேஷை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனா்.
இதுகுறித்து மருந்துவாங்க வந்த நோயாளியின் உறவினா்கள் கூறியது:
மருந்தகத்தில் இருந்த ஊழியா் மதுபோதையில் மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தாா். இதைக் கண்டதும்அதிா்ச்சி அடைந்த நாங்கள் அவரிடம் கேள்வி எழுப்பினோம். ஆனால், அவா் எந்த பதிலும் கூறவில்லை.
அவரை மருத்துவ பரிசோதனை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படுவதை மருத்துவமனை நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றனா்.