இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்! பும்ரா-ஆகாஷ் வேகத்தில் ஆஸி. அணி திணறல்!
பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்! யூடியூப் விடியோவால் மீட்கப்பட்டார்
துபையில் வேலை வாங்கித் தருவதாக முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானில் இறக்கிவிடப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பியுள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து வெளியான அவரது யூடியூப் விடியோவின் மூலம் அவர் மீட்கப்பட்டார். பாகிஸ்தானின் காராச்சியிலிருந்து விமானம் மூலம் லாகூர் வந்து, அங்கிருந்து வாகா எல்லை வழியாக ஹமிதா பானு திங்கள்கிழமை இந்தியா திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பையைச் சேர்ந்த ஹமிதா பானுவை கடந்த 2002-ஆம் ஆண்டு முகவர் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டத்துக்கு அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் அந்நாட்டிலேயே தங்கிவிட்ட ஹமிதா பானு, கராச்சியைச் சேர்ந்த ஒரு பாகிஸ்தானியரை மணந்துள்ளார். கரோனா பெருந்தொற்றில் அவரும் இறந்துவிட, வளர்ப்பு மகனுடன் ஹமிதா பானு வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு உள்ளூர் யூடியூபரான வலியுல்லா மரூஃப், ஹமிதா பானு குறித்த விடியோ செய்தியை சமூக ஊடகத்தில் பதிவேற்றினார். இது இந்தியாவில் உள்ள குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள ஹமிதா பானுவுக்கு உதவியது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு மகள் யாஸ்மீனுடன் ஹமீதா பானு தொலைபேசியில் பேசினார்.
யூடியூபர் மரூஃப் உடனான கலந்துரையாடலில், "பாகிஸ்தான் வருவதற்கு முன்பே எனது கணவர் இறந்துவிட்டதாகவும் இந்தியாவில் தனியாக பணியாற்றி எனது 4 குழந்தைகளை வளர்த்ததாகவும்' ஹமிதா பானு தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் எவ்வித பிரச்னையுமின்றி தோஹா, கத்தார், துபை, சவூதி அரேபியாவில் ஹமிதா பானு சமையல் பணிகளை செய்து வந்துள்ளார். இந்தியாவுக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கையை இழந்திருந்ததாகவும், ஆனால் தற்போது குடும்பத்துடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி என்றும் ஹமிதா பானு தெரிவித்தார்.