பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? வங்கதேசப் பயிற்சியாளர் விளக்கம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்தது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் விளக்கமளித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆசிய கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் வெளியேறியது.
இந்த நிலையில், கேட்ச்சுகளை தவறவிட்டதும், தவறான ஷாட்டுகளை விளையாடியதுமே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடையக் காரணம் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷாகின் மற்றும் நவாஸின் கேட்ச்சுகளை தவறவிட்டபோது, ஆட்டத்தின் போக்கு மாறியது. அதற்கு முன்பு வரை, வங்கதேசம் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. சில கேட்ச்சுகளை அதிகப்படியான லைட் வெளிச்சத்தின் காரணமாக தவறவிட்டார்கள். ஆனால், சில கேட்ச்சுகளை வீரர்கள் கண்டிப்பாக பிடித்திருக்க வேண்டும்.
வங்கதேச அணியின் தோல்விக்கு காரணம் தவறான முடிவுகளே. அனைவரும் நாங்கள் எளிதில் வெற்றி பெறுவோம் என நினைத்தார்கள். ஆனால், எங்களது வீரர்கள் சரியான ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடவில்லை. இலங்கைக்கு எதிரான போட்டியில் 169 ரன்களை துரத்திப் பிடித்து வெற்றி பெற்றோம். அணியில் கேப்டன் லிட்டன் தாஸ் இல்லாதது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. பேட்டர்கள் சரியான ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடியிருக்க வேண்டும் என்றார்.
வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி நாளை மறுநாள் (செப்டம்பர் 28) துபையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The head coach of Bangladesh has explained the team's defeat against Pakistan in the Super 4 round of the Asia Cup cricket.
இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் மோசமான வரலாறு மாறுமா?