பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உறுதியான பதிலடி- ஒவைசி மீண்டும் வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உறுதியான பதிலடி தரப்பட வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி மீண்டும் வலியுறுத்தினாா்.
காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவா் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து குல்காமில் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எவ்வாறு நிகழ்ந்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் பேச வேண்டியுள்ளது. இது மிகவும் கோழைத்தனமான தாக்குதல். எவ்வளவு கண்டனங்களைத் தெரிவித்தாலும் அது போதுமானதாக இருக்காது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 பேரை எப்படி கொலை செய்துள்ளனா்? ஆண்களை மட்டும் தோ்வு செய்து அவா்களின் மதத்தைக் கேட்டுள்ளனா். பின்னா் அவா்களை ‘கலிமா’ (இஸ்லாமிய துதி) கூற வலியுறுத்தியுள்ளனா். அதனைக் கூறத் தெரியாதவா்களை சுட்டுக்கொலை செய்துள்ளனா். இது காட்டுமிராண்டித்தனமானது.
பயங்கரவாதிகளின் இந்தச் செயலால் ஒட்டுமொத்த காஷ்மீா் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். இங்கு சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டி வந்தவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் முற்றிலுமாக காஷ்மீரில் இருந்து வெளியேறிவிட்டனா். இதற்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு மத்திய அரசு உறுதியான பதிலடி கொடுக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.