பாஜகவால் 272 வாக்குகளைகூட பெற முடியவில்லை! எப்படி மசோதாவை நிறைவேற்றுவார்கள்? காங்கிரஸ்
பாரதிய ஜனதா கட்சியால் நேற்றைய மின்னணு வாக்கெடுப்பில் 272 வாக்குகளைகூட பெற முடியாத நிலையில், எவ்வாறு மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிப்பதற்காக முதல்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், மசோதாவுக்கு ஆதரவாக 269(அவையின் பெரும்பான்மை 272) பேரும் எதிராக 196 பேரும் வாக்களித்தனர். அதிகமானோர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து மசோதா தாக்கல் செய்யப்படுவதாகவும், தொடர்ந்து கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்படுவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க : அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்! ராகுல்காந்தி பதிலடி!
இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:
“அவர்களால் 272 வாக்குகளைகூட பெற முடியவில்லை. அடிப்படை பெரும்பான்மைகூட அவர்களுக்கு கிடையாது. அவர்களால் எப்படி மசோதாவை நிறைவேற்றும்போது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியும்.
272 உறுப்பினர்களின் ஆதரவைகூட பெறமுடியாதவர்களால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெறுவது நடக்காத ஒன்று” என்றார்.
மேலும், அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது பற்றி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
“யார் யாரை இழிவுபடுத்துகிறார்கள் என்பது நேற்று தெளிவாகிவிட்டது. அம்பேக்ரை உள்துறை அமைச்சர் அவமதித்துள்ளார். அம்பேத்கர் பெயரை உச்சரித்ததற்கு பதிலாக கடவுள் பெயரை கூறியிருந்தால் நல்லது நடந்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இது அம்பேத்கரை அவமதிக்கும் செயல் அல்லாமல் வேறென்ன? பிரதமரும், உள்துறை அமைச்சரும், பாஜகவும் அம்பேத்கரை இழிவுபடுத்தி காங்கிரஸ் மீது பழி சுமத்துகிறார்கள் என்பதுதான் உண்மை” எனத் தெரிவித்தார்.