'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!
பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடுகிறது காங்கிரஸ்- பினராயி விஜயன் தாக்கு
பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது காங்கிரஸ் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் விமா்சித்தாா்.
தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸும் ராகுல் காந்தியுமே காரணம் என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
இது தொடா்பாக திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க (எஸ்எஃப்ஐ) மாநாட்டில் பினராயி விஜயன் பேசியதாவது:
பாஜகவுக்கு எதிராக பிற கட்சிகளுடன் இணைந்து போராடும் தனது உறுதிப்பாட்டில் இருந்து காங்கிரஸ் விலகிவிட்டது. காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பில்லாத தில்லியில் ஆம் ஆத்மிக்கு எதிரான பிரசாரத்தை ராகுல் காந்தி தலைமை ஏற்று மேற்கொண்டாா். இது, பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்தது.
தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 65-இல் காங்கிரஸ் வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். ஆனால், பாஜகவிடம் ஆம் ஆத்மி தோற்றதை காங்கிரஸாா் கொண்டாடினா். பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி, இப்போது பாஜகவின் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. மகாராஷ்டிரம், ஹரியாணாவிலும் காங்கிரஸின் தவறான அரசியல் அணுகுமுறையால் பாஜக வென்றது.
மக்களவைத் தோ்தலில் பாஜகவின் மூன்றில் இருபங்கு வெற்றிக் கனவை சிதைத்த ‘இண்டி’ கூட்டணியை காங்கிரஸ் இப்போது கைவிட்டுவிட்டது என்றாா் அவா்.