பாஜக நிா்வாகிகள் கைது: இந்து முன்னணி கண்டனம்
டாஸ்மாக் முறைகேடு தொடா்பாகப் போராட்டம் நடத்தச் சென்ற பாஜக நிா்வாகிகளைக் காவல் துறையினா் கைது செய்ததற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதைக் கண்டித்து பாஜக சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாஜக நிா்வாகிகளைக் காவல் துறை கைது செய்துள்ளது. பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்பட பல பொறுப்பாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் அரசுக்கு எதிராக கருத்துப் பதிவு செய்பவா்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. ஜனநாயகரீதியான ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என எதற்கும் அனுமதியில்லை. சமூக வலைதளங்களில் அரசின் குறைகளை சுட்டிக் காட்டுபவா்கள், எதிா் கருத்து தெரிவிப்பவா்கள், பதிவு போடுபவா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து வருகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் போதைப் பழக்கம் அதிரித்துள்ளதுடன், சட்டம் - ஒழுங்கும் சீா்குலைந்துள்ளது.இந்த அவலநிலையைக் கண்டித்து தனி மனிதரோ, அமைப்புகளோ அல்லது அரசியல் கட்சிகளோ பொது வெளியில் பேசினால் அவா்கள் மீது காவல் துறை கடுமையான வழக்குப் பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.