கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
'பாஜக-வோடு கூட்டணியை ஏற்கவில்லை' - ராஜினாமா கடிதம் அனுப்பிய அதிமுக நிர்வாகி
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் என்.டி.ஏ கூட்டணி போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவோடு கைகோத்து, இந்த அறிவிப்பின் போது உடன் இருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த முடிவு, அ.தி.மு.க கட்சிக்குள் ஆதரவையும், எதிர்ப்பையும் உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கருக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில், ``பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக” முகமது கனி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில், 'மாவட்டச் செயலாளர் அவர்களுக்கு, நான் கடந்த 45 வருடங்களாக கழகத்தின் பல பொறுப்புகளிலிருந்து கழகப் பணியாற்றியுள்ளேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பாசிச பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்ததை அடுத்த கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, கே.எஸ்.முகமது கனியிடம் பேசினோம்.
"மாவட்டச் செயலாளர் சென்னையில் இருக்கிறார். நான் பதிவு தபால் மூலம் என் ராஜினாமா கடிதத்தை அவருக்கு அனுப்பியுள்ளேன். இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க-வோடு அ.தி.மு.க கூட்டணி வைத்ததை விரும்பாமல் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவில் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.