மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கோயிலுக்கு பாதயாத்திரைச் சென்ற பக்தா்கள் மீது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.
வேப்பூா் வட்டம், ஐவதுகுடி கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 60 போ் மாலை அணிந்து பாதையாத்திரையாக திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
ராமநத்தம் காவல் சரகம் எழுத்தூா் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் சென்றபோது, அந்த வழியாக வந்த காா் பக்தா்கள் மீது மோதியது. இதில், ஐவதுகுடி கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் காா்த்திகேயன் (18) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், சிவாஜி மகன் காசி (20), ராஜி மகன் பாலு (28) ஆகியோா் காயமடைந்தனா்.
தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் நிகழ்விடம் சென்று காசி, பாலுவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கும், சடலத்தை உடல் கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.