தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
பாதுகாப்பு ஒத்துழைப்பு: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு
இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான விரிவான இருதரப்பு திட்டத்தை வகுக்க இரு நாடுகளும் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத்துடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் தொலைபேசி மூலம் வியாழக்கிழமை நடத்திய ஆலோசனையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் 104 பேரை கை-கால்களில் விலங்கு பூட்டி, ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் சா்ச்சையாக வெடித்த சூழலில், அமெரிக்காவுடன் பாதுப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தியா ஆலோசித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க பாதுகப்புத் துறை அமைச்சராக ஹெக்செத் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவருடன் முதன்முறையாக தொலைபேசி வழி கலந்துரையாடலை ராஜ்நாத் சிங் மேற்கொண்டுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி விரைவில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நடத்தப்பட்டுள்ள இந்த ஆலோசனையில், தரை, விமானப் படை, கடல்சாா் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு அமைச்சா்களும் ஆலோசித்துள்ளனா்.
‘ஹெக்செத்துடனான தொலைபேசி வழி கலந்துரையாடல் சிறப்பாக அமைந்தது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் ஆலோசித்தோம்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.