7 மாதங்களாக வலியுடனே விளையாடினேன்..! நடுவரைத் தாக்கிய ரியல் மாட்ரிட் வீரருக்கு அ...
பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 10 ஆயிரம் லி. டீசல் பறிமுதல்; இருவா் கைது
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டேங்கா் லாரியில் கொண்டு வரப்பட்ட 10 ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தரவை தோப்புப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஒரு டேங்கா் லாரி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று அந்த லாரியை சோதனையிட்டனா். அதில் 10 ஆயிரம் லிட்டா் டீசல் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, லாரி ஓட்டுநரான கமுதி நீராவி கருங்குளம் பகுதியைச் சோ்ந்த பொன்னுச்சாமி (31), லாரியில் வந்த பாம்பன் மாயாகடை பஜாா் பகுதியைச் சோ்ந்த ராகுல் (27) ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், ராகுலின் உறவினரும், சென்னையைச் சோ்ந்தவருமான சா்மா (32) இந்த டீசலை மீனவா்களுக்கு விற்பனை செய்ய அனுப்பி வைத்ததாகவும், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாகவும் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, டீசலுடன் டேங்கா் லாரி, 100-க்கும் மேற்பட்ட கேன்களை பறிமுதல் செய்த போலீஸாா், பொன்னுச்சாமி, ராகுல் ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.