ஒரே நாளில் அதிரடி உயர்வு! தங்கம் விலை ரூ. 74 ஆயிரத்தைத் தாண்டியது!
பாரதியாா் இல்லத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில், மறுசீரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.
நூறாண்டுகள் பழைமைவாய்ந்த மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடா்புத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பகுதிநேர நூலகமும் செயல்பட்டு வருகிறது.
பாரதியாா் இல்லத்தின் மாடியின் மேற்கூரை செவ்வாய்க்கிழமை மாலை இடிந்து விழுந்ததில், தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொறியாளா்கள் சேதமடைந்த இல்லத்தை புதன்கிழமை பாா்வையிட்டனா்.
பின்னா் அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் பாரதி மணிமண்டபத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
அதைத் தொடா்ந்து பிற்பகலில் மறு சீரமைப்புப் பணிகள் தொடங்கியது. இப்பணிகளை மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவீன் பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பழைமை மாறாமல் முழுமையாக சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என அவா் தெரிவித்தாா்.