சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் மனிதநேயம்..! -ஐ.நா. தலைவர் வேதனை
பாராசிட்டமால் மாத்திரையால் ஆட்டிசம் வருமா? - ட்ரம்ப் கருத்தும், நிபுணர்கள் மறுப்பும்!
பாராசிட்டமால் அல்லது அசட்டாமினோபென் என அழைக்கப்படும் மாத்திரை, உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி, காய்ச்சல் குறைப்பு மருந்து ஆகும்.
சமீபத்தில் இந்த மருந்து குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
ட்ரம்ப் பேசியதென்ன?
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் 'டைலெனால்' மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற அவர், அது குழந்தைகளுக்கு ஆட்டிசம் பிரச்னை ஏற்படுவதுடன் தொடர்புடையது எனக் கூறியுள்ளார்.
டைலெனால் என்பது அமெரிக்காவில் பாராசிட்டமாலுக்கு வழங்கப்படும் ஒரு பிராண்ட் பெயர் ஆகும் (இந்தியாவில் டோலோ போல).
ட்ரம்ப்பின் இந்தக் கூற்றுக்கு மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் அறிவியலுக்கு முரணாக பேசுவதாக விமர்சித்துள்ளனர்.
"ட்ரம்ப்பின் கருத்து பொறுப்பற்றது"
'அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கல்லூரி'யின் தலைவர், ட்ரம்பின் கருத்துக்களை "பொறுப்பற்றது" மற்றும் "தீங்கு விளைவிக்கும் மற்றும் குழப்பமான செய்தி" என விமர்சித்துள்ளார்.
குழந்தை மருத்துவரும் முன்னாள் உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானியுமான, டாக்டர் சௌமியா சுவாமிநாதன் என்.டி.டி.வி தளத்துக்கு அளித்த பேட்டியில், "பாராசிட்டமாலை ஆட்டிசத்துடன் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை." எனக் கூறியுள்ளார்.

மேலும், பாராசிட்டமாலை அதிகப்படியாக எடுத்துக்கொள்வது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளும்போது எந்த பாதிப்பும் வராது எனக் கூறியுள்ளார்.
பராசிட்டமால்: தீங்கை விட பலன்கள் அதிகம்
பாராசிட்டமாலால் வரும் பாதிப்புகளை விட பலமடங்கு அதிகமான பலன்களை பெறுவதனால் அதைப் பயன்படுத்துவதுதான் அறிவார்ந்த தேர்வு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் கூட்டமைப்பு (FIGO), பாராசிட்டமாலை பாதுகாப்பான மருந்துகளில் ஒன்று எனக் கூறுவதுடன் அதன் பயன்பாட்டைப் பரிந்துரைக்கிறது.
அமெரிக்க அதிபரின் கருத்தால் பொதுமக்கள் அச்சப்பட அவசியமில்லை என்கின்றனர் நிபுணர்கள்.