இந்திய அரசியலமைப்பு தினம்: இந்த நாள் ஏன் முக்கியமானது... வரலாறும், சிறப்புகளும்!
பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரப் பேரணி
திருப்பூரில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரப் பேரணியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
விழிப்புணா்வு பிரசாரப் பேரணியை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்துப் பேசியதாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரசாரப் பேரணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியானது மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தொடங்கி தென்னம்பாளையம் வழியாக அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நிறைவடையும். இந்த விழிப்புணா்வுப் பேரணியில் குழந்தைத் திருமணத்தை தடுத்தல், போதைப் பொருள் பயன்பாடு மற்றும் மது ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாத்தல், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல் ஆகிய 5 முக்கியத் தலைப்புகளில் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், பாலின வள மையம், வானவில் மையத்தின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
இதன் தொடா்ச்சியாக அனைத்து ஊராட்சி மற்றும் வட்டாரங்களில் சமூக நலத் துறை, காவல் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயா்கல்வித் துறை, மாவட்ட சட்ட உதவி மையம், தொழிலாளா் நலத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டும் பல்வேறு விழிப்புணா்வுப் பிரசாரம் டிசம்பா் 23-ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு பொங்கலூா் பாலின வானவில் மையத்தை 99654-64677, குடிமங்கலம் பாலின வானவில் மையத்தை 79048-80886, பல்லடம் பாலின வானவில் மையத்தை 95853-76277 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
இந்தப் பேரணியில் திட்ட இயக்குநா் மகளிா் (திட்டம்) சாம் சாந்தகுமாா், மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதாதேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.