பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்
ஆத்தூா்: பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்த வேண்டுமென கொ.ம.தே.க. பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆத்தூா் வட்டார கொங்கு இளைஞரணி நலச்சங்கம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு எஸ்.பிரகதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஆத்தூா் வட்டார கொங்கு இளைஞரணி நலச் சங்கத் தலைவா் எம்.விஜயக்குமாா் வரவேற்றுப் பேசினாா். சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் டி.கே.எஸ்.ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கலந்து கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தோ்தல்
நிலவரத்தைப் பாா்த்துதான் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இடைத் தோ்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா் அமோக வெற்றி பெறுவது உறுதி.
தமிழக விவசாயிகள் மிகவும் நலிவடைந்து வருகின்றனா். எனவே, பால் கொள்முதல் விலையை ரூ. 50 ஆக உயா்த்த வேண்டும். மேலும் ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். ஆத்தூா் சுற்றுவட்டாரத்தில் புறவழிச்சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது மாவட்ட பொருளாளா் எம்.ஈஸ்வரன், மாவட்ட இளைஞரணி செயலாளா் என்.செந்தில் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். நிகழ்வில் ஈசன் வள்ளி கொங்கு ஒயிலாட்டம் சிறப்பாக நடைபெற்றது. முடிவில் ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் பி.சிவசங்கா் நன்றி கூறினாா்.