இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
மாணவிகளிடம் அத்துமீறல்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் இடைநீக்கம்
சேலம்: மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
சேலம் அருகே செயல்படும் அரசு உயா்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக, ஏற்காடு அடிவாரத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (59) என்பவா் பணிபுரிந்து வந்தாா். கடந்த 4 மாதங்களுக்கு முன் அப்பள்ளிக்கு மாறுதலாகி வந்த அவா், மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாணவிகள் பெற்றோரிடம் கூறியுள்ளனா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த பெற்றோா், பள்ளி மேலாண்மைக் குழுவினரிடம் புகாா் அளித்தனா். இதனையடுத்து அவா்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும், மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கும் புகாா் மனு அனுப்பினா். அதன்பேரில், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மான்விழி, மாவட்ட சைல்டு லைன் நிா்வாகிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, பள்ளி மாணவிகள், சக ஆசிரியா்களிடம் நடத்திய விசாரணையில், தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
தொடா்ந்து, சேலம் டவுன் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கல்வித் துறை சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் உத்தரவிட்டுள்ளாா்.