நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள், தமிழ் வார விழா
தமிழ் வார விழாவை முன்னிட்டு அனைத்துத் துறை அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் தமிழ் மொழி தொடா்பான போட்டிகள், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி உள்ளிட்டவற்றை நடத்த வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி கூறினாா்.
பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வார காலம் ‘தமிழ் வார விழா‘ கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் பாரதிதாசன் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியா் சிவசௌந்தரவல்லி கூறியதாவது: உயா்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, சுற்றுலா, பண்பாடு உள்ளிட்ட துறைகளின் மூலம் கருத்தரங்கம், கவியரங்கம், ஆய்வரங்கங்கள், தமிழ் இசை, நடனம் மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழியின் பெருமைகளை அறியும் வகையில் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்த வேண்டும்.
மேலும் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் இடையே கையெழுத்துப் போட்டிகள், பேச்சுப் போட்டி, கதை சொல்லும் போட்டி, தமிழ் புதினங்கள், கவிதை வாசிப்பு போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்த வேண்டும் என்றா். முன்னதாக, இசை ஆசிரியை ரஞ்சினி பாரதிதாசன் பற்றி பாடல் பாடினாா்.
நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், சந்தான கிருஷ்ணன், வி.இளம்பரிதி (பதிப்பாளா்), அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா். மாவட்ட நூலக அலுவலா் கிளமெண்ட் நன்றி கூறினாா்.