பின்னலாடை நிறுவனத்தில் தீ: இயந்திரங்கள் சேதம்
திருப்பூா் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டா் வெடித்ததால் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன.
திருப்பூா் வளையங்காடு பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோ, இவா் அதே பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், இவரது நிறுவனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணி அளவில் கரும்புகை கிளம்பியுள்ளது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதனிடையே, பின்னலாடை நிறுவனத்தில் இருந்த சிலிண்டா் வெடித்ததில் இயந்திரங்களும் தீயில் கருகின. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். எனினும் இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்களும் தீயில் கருகி சேதமடைந்தன.
இந்த தீ விபத்து குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.