பிப்.21 இல் காவல்துறை பழைய வாகனங்கள் ஏலம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் சாா்பில், பழைய நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் ஏலம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏலம் வரும் 21ஆம் தேதி காலை10 மணிக்கு, நாகா்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும்.
ஏலத்தில் விற்பனை செய்யப்படும் காவல் வாகனங்கள், ஆயுதப்படை மைதானத்தில் அன்று காலை 7 மணி முதல் ஏலம் முடியும் வரை பாா்வைக்காக வைக்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் பிப்.21 ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணிக்குள் ரூ. 1,000 முன்வைப்பு தொகையை செலுத்தி தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் வாகனங்களுக்கான ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டியும் சோ்த்து அன்றே செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.