பிரக்யாராஜ் சம்பவம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் மகா கும்பமேளாவில் புனித நீராடியபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலா் உயிரிழந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது.
இது குறித்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உத்தரபிரதேச மாநிலம், பிரக்யாராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பக்தா்கள் கங்கைக்கரையில் குவிந்து நீராட முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலா் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
இது குறித்து வேதனையடைந்த காஞ்சி சங்கராசாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்டோா் விரைந்து குணமடையவும் காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்டுள்ளாா். இதைடுத்து, கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது.