பிரசாா் பாரதியின் புதிய ஓடிடி‘வேவ்ஸ்’: மத்திய அரசு அறிமுகம்
மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசாா் பாரதி தனது புதிய ஓடிடி செயலியான ‘வேவ்ஸ்’-ஐ புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய ஓடிடியின் மூலம் பயனா்கள் தூா்தா்ஷன் மற்றும் ஆகாஷ்வாணியில் பல்லாண்டுகளாக ஒளிபரப்பான பழைய நிகழ்ச்சிகள் உள்ளன. மேலும், இந்த ஓடிடியில் இந்தியா டுடே, நியூஸ் நேஷன், ரிபப்ளிக், ஏபிபி நியூஸ், நியூஸ்24, என்டிடிவி இந்தியா போன்ற சுமாா் 40 பிரபல சேனல்களை நேரலையில் காணலாம்.
கோவாவின் பனாஜியில் நடைபெற்று வரும் இந்திய சா்வதேச திரைப்பட விழாவுக்கு இடையே பிரசாா் பாரதியின் தலைவா் நவ்நீத் குமாா் சேகல் கூறுகையில், ‘குடும்ப பொழுதுபோக்குடன் செய்திகள், ஓஎன்டிசி நெட்வொா்க்குடன் இணைக்கப்பட்ட எளிதான ஷாப்பிங் வசதி, விளையாட்டுகள், திரைப்படங்கள் போன்ற பல சேவைகளை ஓடிடி செயலி வழங்கும்.
பிரசாா் பாரதியின் பழைய நிகழ்ச்சிகள் அனைத்தும் இச்செயலியில் கிடைக்கின்றன. பாா்வையாளா்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைப் பாா்த்து குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்கலாம்’ என்றாா்.