Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்... பொருளாதார சிக்கல்' - ஜஸ்டின் ட்ரூடோ ராஜினா...
பிரதமர் மோடி வீட்டில் கன்றுக்குட்டி: ஆர்டிஐ-ன் கீழ் பதில் அளிக்க மறுப்பு!
புது தில்லி: 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி கன்றுக்குட்டியுடன் பிரதமர் மோடி வெளியிட்ட புகைப்படம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது தனிப்பட்ட நபரின் தகவல்கள் என்று பிரதமர் அலுவலகம் பதிலளிக்க மறுத்துவிட்டது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வளர்க்கப்பட்டு வரும் பசுமாடு ஒன்று புதிதாக கன்று ஈன்றிருப்பதாகவும், அதற்கு தீபஜோதி என பிரதமர் நரேந்திர மோடி பெயரிட்டுள்ளதாகவும் அழகிய படங்கள் வெளியிடப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கன்றுக்குட்டியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், சித்தார்த் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்துக்கு இது தொடர்பாக சில கேள்விகளை கேட்டிருந்தார்.
அதாவது, ஆந்திர மாநிலம், ராயலசீமாவை பூர்வீகமாகக் கொண்ட பங்கனூர் இனத்தைச் சேர்ந்த ஒரு கன்றுக்குட்டியின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
இந்த இனப்பசுமாடுகள் எங்கிருந்து எத்தனை மாடுகள், எப்படி பிரதமர் அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன. ராயலசீமாவிலிருந்து எந்தவிதமான வாகனத்தில் இந்த மாடுகள் தில்லி வரை அழைத்து வரப்பட்டன, பசுமாடுகளை வாங்கியது, அவற்றுக்கான போக்குவரத்து மற்றும் கால்நடை மருத்துவர்களின் செலவு எவ்வளவு ஆனது எனறும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் பதிலில், தங்களால் கோரப்படும் தகவல் தனி நபரின் தனிப்பட்ட தகவலாக உள்ளது, அது மட்டுமல்லாமல், இந்த அலுவலகம் வைத்திருக்கும் தரவுகளின் பட்டியலில் இந்த தகவல் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி எழுப்பியவர், தன்னுடைய கேள்வி மற்றும் பிரதமர் அலுவலக பதிலை மேற்கோள்காட்டி, தனிப்பட்ட தகவல் என்றால், ஏன் பொதுவெளியில் பிரதமர் அலுவலகம் பகிர வேண்டும், நீங்கள் எதைவேண்டுமானாலும் பொதுவெளியில் வெளியிடுவீர்கள், கேட்டால் பிரதமரின் தனிப்பட்ட விவரம் என்பீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த கேள்வியும், பிரதமர் அலுவலக பதிலும் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது.