இந்திய அணிக்கு வலிமை சேர்க்க அவர் வந்துவிட்டார்... யாரைக் கூறுகிறார் ரவி சாஸ்திர...
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு - மதுரை மக்களும், வாசகர்களும் அதிர்ச்சி!
பிரபல எழுத்தாளரும், ஆன்மிக பேச்சாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் திடீரென மரணமடைந்த சம்பவம், மதுரை மக்களுக்கும் வாசகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை பூர்வீகமாகக்கொண்டு மதுரையில் வசித்து வந்த இந்திரா சௌந்தர்ராஜன் டி.வி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சிறு வயது முதலே இதழ்களுக்கு எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் இதுவரை 700-க்கும் மேற்பட்ட சிறுகதை, நாவல்களை எழுதியுள்ளார். இவரது கதை வசனத்தில் ஒளிபரப்பான மர்ம தேசம், மந்திர வாசல், விடாது கருப்பு உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. பல்வேறு இதழ்களில் சிறுகதை, தொடர்கதைகளை எழுதினார்.
ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடனில் சமூகம் சார்ந்தும், அமானுஷ்யம் சார்ந்தும் தொடர்களை எழுதியவர், புதிய கோணத்தில் ஆன்மிகத் தொடர்களை எழுதி வாசகர்களால் கொண்டாடப்பட்டார். அதுமட்டுமன்றி பல நிகழ்ச்சிகளில் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் உரையாற்றி வந்தவர், சிறந்த ஆன்மிக பேச்சாளராகவும் திகழ்ந்தார். சில திரைப்படங்களிலும் பணியாற்றியவர் தமிழக அரசு விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
மதுரை டி.வி.எஸ் நகர் சத்யாசாய்நகர் பகுதியில் வசித்து வந்த இந்திரா சௌந்தர்ராஜன், ஏற்கெனவே உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.