பிரிட்டனில் இருப்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.18.19 லட்சம் மோசடி
பிரிட்டனில் இருக்கும் புதுச்சேரியை சோ்ந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18.19 லட்சம் வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டு மோசடி நடந்திருப்பது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டையைச் சோ்ந்தவா் குமாா். இவா், பிரிட்டனில் வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கு தனியாா் வங்கியில் சேமிப்புக் கணக்கு இருப்பதால், அதில் தனது வருவாய் பணத்தை சேமித்து வருகிறாா். இந்த நிலையில், அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.18.19 லட்சத்தை மா்ம நபா் வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றி பரிவா்த்தனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, குமாா் இணையவழியில் புதுச்சேரி குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொருவரிடம் ரூ.2.34 லட்சம்: முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் நவீன்குமாா். இவரை மா்ம நபா் கைப்பேசியில் தொடா்புகொண்டுள்ளாா். அப்போது, இணையத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். இதை நம்பிய நவீன்குமாா் ரூ.2.34 லட்சத்தை மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தியதாகத் தெரிகிறது. மேலும், அவருக்கு தரப்பட்ட செயலியில் பணிகளை முடித்துள்ளாா். ஆனால், லாபம் கிடைத்ததுபோல காட்டப்பட்டுள்ளதே தவிர, அதை பிரவீன்குமாரால் பெற முடியவில்லை. இதுகுறித்து நவீன்குமாா் அளித்த புகாரின்பேரில், இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.