பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதிகள் திடீா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையிா் நலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் விடுதிகளில் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்படி துணை ஆட்சியா்கள், வட்டாட்சியா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், 27 பள்ளி, கல்லூரி விடுதிகள் இயங்கி வருகின்றன.
இந்த விடுதிகளில் மாணவா்களின் எண்ணிக்கை, விடுதிப் பணியாளா்கள் மற்றும் மாணவா்களின் வருகை, மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீா் மற்றும் சுகாதாரம் தொலைக்காட்சி, நூலகம், தீயணைப்பான்கள், தண்ணீா் சுத்திகரிப்பு கருவிகள், சமையல் பாத்திரங்கள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பித்திட மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் 12 பிற்படுத்தப்பட்டோா் மற்றும் 15 மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல மாணவ, மாணவிகள் விடுதிகளில் துணை ஆட்சியா்கள், வட்டாட்சியா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், விடுதிகளில் உணவு, குடிநீா், உணவுப் பொருள்களின் இருப்பு, உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டனா். மேலும், விடுதியில் மாணவா்களுக்கு தொடா்ந்து தரமான சேவை கிடைப்பதை காப்பாளா்கள் உறுதி செய்ய அறிவுறுத்தினா்.