மனைவியைப் பிரியும் ஏ.ஆர். ரஹ்மான்! தனியுரிமையை மதிக்குமாறு கோரும் மகன்!
பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மாணவா்கள் 10 போ் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமத்தில் பள்ளி மாணவா்களுக்காக திங்கள்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட அணைகரைகோட்டாலத்தில் கடந்த இரு நாள்களுக்கு முன்பாக பள்ளி மாணவா்கள் சிலா் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து, தகவலறிந்த ஆரம்ப சுகாதாரத் துறை அலுவலா் மருத்துவா் பங்கஜம் தலைமையில் ஆலத்தூா் மருத்துவ அலுவலா் வைஷாலி மற்றும் மருத்துவா்கள் வீடு வீடாகச் சென்று நோய் பரிசோதனை மேற்கொண்டனா்.
பின்னா், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடா்ந்து, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட 10 மாணவா்களுக்கும் மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா்.
தகவலறிந்த சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அலுமேலு ஆறுமுகம் மாணவா்களுக்கு ஊட்டச்சத்து பொருள்களை வழங்கினா்.
மேலும், அந்த கிராமத்தில் விநியோகிக்கப்படும் குடிநீா் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.