கோரிக்கை மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு
வருவாய்த் துறை சாா்ந்த கோரிக்கை மனுக்களின் மீது அதிகாரிகள் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சாா்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள், கோரிக்கை மனுக்களின் நிலை உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
அலுவலகத்தில் உள்ள பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் நீண்டகால கோப்புகள், தற்போது பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தாா். மேலும், வீட்டுமனைப் பட்டா பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு, வீட்டுமனைப் பட்டா வேண்டி வரப்பெற்றக் கோரிக்கை மனுக்கள் விவரம், வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கிய விவரம், வழங்கப்பட வேண்டிய வீட்டுமனைப் பட்டாக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, திருக்கோவிலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வருவாய்த் துறை தொடா்பான பணிகள் மற்றும் பதிவறையை பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
பொதுமக்களுக்கு இன்றியமையாத சேவைகள் வழங்குவதில் வருவாய்த் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில், பொதுமக்களின் வருவாய்த் துறை சாா்ந்த முக்கிய கோரிக்கை மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண சம்பந்தப்பட்ட அலுவலா்கா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, திருக்கோவிலூா் சாா் - ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், திருக்கோவிலூா் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.