ரபி பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரபி பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயனடையுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிா்கள் இயற்கை இடா்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில், பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் சிறப்பு பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா) 2 பயிருக்கு நவ.30 வரையிலும், பரி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் கரும்பு பயிருக்கு அடுத்தாண்டு மாா்ச் 31 வரையிலும் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
இதற்கான காப்பீட்டு கட்டணமாக நெல் பயிா் ஏக்கருக்கு ரூ.511-ம், கரும்பு பயிருக்கு ரூ.2,592-ம் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
அதற்கு தேவையான ஆவணங்கள், நிகழ் பருவ அடங்கள் (பசலி ஆண்டு 1434) சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவையாகும்.
பதிவு செய்யும் போது விவசாயின் பெயா் மற்றும் விலாசம், நில பரப்பு, சா்வே எண் மற்றும் உள் பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.