``பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 56.33%'' -தெலங்கானாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை..
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துவருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, தேர்தல் வாக்குறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அதில், தெலங்கானாவின் மக்கள் தொகையில் 56.33 சதவிகித மக்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என தெலங்கானாவின் சமூகப் பொருளாதார, அரசியல், சாதி கணக்கெடுப்புக்கான அறிக்கை தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக நேற்று அமைச்சரவை துணைக் குழுவிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், ``தெலங்கானா மாநிலத்தில் (BC) பிற்படுத்தப்பட்ட வகுப்பின மக்கள் தொகை 1,64,09,179 (46.24 சதவிகிதம்). பட்டியலின மக்கள் தொகை (SC) 61,84,319 (17.43 சதவிகிதம்). பட்டியலின பழங்குடியினர் மக்கள் தொகை (ST) 37,05,929 (10.45 சதவிகிதம்). இதர சாதியினர் மக்கள் தொகை (OC) 44,21,115 (13.31 சதவிகிதம்).
முஸ்லிம் மக்கள் தொகை 44,57,012 (12.56 சதவிகிதம்). இதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பின முஸ்லிம்கள் (BC) 35,76,588 (10.08 சதவிகிதம்) இதர சாதியின முஸ்லிம்கள் (OC) 8,80,424 (2.48 சதவிகிதம்)" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தெலங்கானா அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி, ``நலத்திட்டங்களைச் செம்மைப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை மேம்படுத்தவும், பலவீனமான பிரிவுகளை மேம்படுத்தவும் உதவும் என்ற அடிப்படையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 4, 2024-ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், மாநில திட்டமிடல் துறையால் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. தெலுங்கானாவில் 50 நாள்களில் 3,54,77,554 பேரையும் 96.9% வீடுகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 94,261 கணக்கெடுப்புத் தொகுதிகளில், 94,863 கணக்கெடுப்பாளர்கள், 9,628 மேற்பார்வையாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மொத்தம் 76,000 தரவு உள்ளீட்டு ஆபரேட்டர்கள், 36 நாள்களுக்குள் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கினர். பீகாரில் இதேபோன்ற கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதை விட, தெலுங்கானாவின் செயல்முறை சீராகவும் திறமையாகவும் இருக்கிறது. தெலங்கானாவில் சமூக நீதிக்கு இது ஒரு வரலாற்று நாள். இந்தப் புதிய தகவல் அறிக்கை, மாநிலத்தில் ஆட்சி, கொள்கை வகுப்பது போன்றவைகளில் மறுவரையறை செய்ய ஒரு மைல்கல்லாக அமையும்." என்றார்.