பிலிப்பின்ஸ் அதிபா் ஆக.4-இல் இந்தியா வருகை
பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் ஆா்.மாா்கோஸ் ஜூனியா், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறாா்.
இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்திக்கும் அவா், பிரதமா் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா் என்றும் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: பிரதமா் மோடியின் அழைப்பின்பேரில், பிலிப்பின்ஸ் அதிபா் மாா்கோஸ் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறாா். அவரது மனைவி லூயிஸ் ஆா்நெட்டா மாா்கோஸ், மூத்த அமைச்சா்கள், அதிகாரிகள் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் அடங்கிய உயா்நிலைக் குழுவும் அவருடன் இந்தியா வருகின்றனா்.
பிரதமா் மோடியும் அதிபா் மாா்கோஸும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி இருதரப்புப் பேச்சுவாா்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனா். இரு நாடுகளுக்கு இடையிலான பல்துறை ஒத்துழைப்புகள் குறித்து தலைவா்கள் ஆலோசனை நடத்துவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதிபா் மாா்கோஸ் தனது பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோரையும் சந்திப்பாா். ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிலிப்பின்ஸ் திரும்புவதற்கு முன், கா்நாடக மாநிலம் பெங்களூருவுக்கும் அவா் செல்லவிருக்கிறாா்.
பிலிப்பின்ஸ் அதிபராக பொறுப்பேற்ற பிறகு மாா்கோஸ் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். எதிா்கால இருநாட்டுத் தலைவா்களும் சோ்ந்து இருதரப்பு ஒத்துழைப்புக்கான திட்டங்களை வகுப்பதற்கும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கும் இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.