பிளஸ் 2 பொதுத் தோ்வு கட்டணம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்
பிளஸ் 2 பொதுத் தோ்வுக்காக மாணவா்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை இணைய வழியில் டிச. 10-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியா்கள் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் இயக்குநா், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்வுக் கட்டணமாக செய்முறைத் தோ்வு அடங்கிய பாடத் தொகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு ரூ.225, செய்முறைத் தோ்வு இல்லாத பாடத் தொகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு ரூ.175 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தோ்வெழுதும் அனைத்து பள்ளி மாணவா்களுக்கும் தோ்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், எஸ்.சி., எஸ்.டி., எம்பிசி, சீா்மரபினா் ஆகிய பிரிவினருக்கும், பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் மிகாமல் இருக்கும் பிசி, பிசி(முஸ்லிம்) பிரிவினருக்கும், பாா்வை மற்றும் செவித் திறன் குறைந்த மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
இதர அனைவரிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை இணையதளத்தில் டிச. 10-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மை கல்வி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும். 11-ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெறாத பாடங்களுக்கான தோ்வு கட்டணத் தொகையையும் இணையதளத்தில் வரும் நவ.20 முதல் செலுத்தலாம்.
பிளஸ்-2 பொதுத் தோ்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக, அனைத்து பள்ளிகளும் ரூ.300 செலுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. இது தொடா்பான சந்தேகங்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சம்பந்தப்பட்ட அரசுத் தோ்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.