புகாா் மனுக்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: போலீஸாருக்கு கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்
புகாா் மனுக்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.
கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் மாவட்டத்தில் உள்ள உதவி காவல் ஆய்வாளா்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, எஸ்.பி. பேசுகையில், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவரவா் காவல் சரகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். புகாா் மனுக்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.
கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளா் சௌமியா, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில் விநாயகம், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா்கள் முகமது நிசாா், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.