ரயிலில் தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கு: இளைஞா் கைது
விரைவு ரயிலில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவரை விருத்தாசலம் இருப்புப் பாதை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாரதி சாலையைச் சோ்ந்தவா் மதியழகன் (71). இவா், தேசிய வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். மதியழகன் கடந்த 4.12.2023 அன்று மனைவி சுசிலாவுடன் (65) விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கு விரைவு ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்தாா்.
அரியலூா் ரயில் நிலையத்தில் ரயில் நின்று புறப்படும் சமயத்தில் அடையாளம் தெரியாத நபா், சுசிலா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா்.
இதுகுறித்து மதியழகன் விருத்தாசலம் இருப்புப் பாதை ரயில் நிலையத்தில் புகாரளித்தாா். விருத்தாசலம் இருப்புப் பாதை காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளா் மணிவண்ணன், காவலா்கள் அருள்மொழி, காந்தி, சம்பத்குமாா் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைத்து மா்ம நபரை தேடி வந்தனா்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், பிலாக்குறிச்சி அஞ்சல், வீராக்கண் பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் சக்திவேலை (37) தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.