புதுகையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு
தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் தலைமையில், உறுப்பினா்கள் செல்லூா் ராஜு, ஓ.எஸ். மணியன், சேவூா் எஸ். ராமச்சந்திரன், ஆா்.எம். கருமாணிக்கம், மா. சின்னதுரை, எஸ். சுதா்சனம், மு. பன்னீா்செல்வம், எஸ்.எஸ். பாலாஜி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், சட்டப்பேரவை முதன்மைச் செயலா் கி. சீனிவாசன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை புதுக்கோட்டை வந்தனா்.
இந்தக் குழுவினா் நமணசமுத்திரம் நியாயவிலைக் கடை, அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் விடுதி, சிறைத்துறை பெட்ரோல் பங்க், புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி, மச்சுவாடி கால்நடை மருத்துவமனை மற்றும் கைக்குறிச்சி நான்கு வழிச்சாலைப் பணி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனா்.
அப்போது செய்தியாளா்களிடம் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் பேசியது:
நியாயவிலைக் கடையில் சில பொருட்கள் மட்டும் வித்தியாசமாக இருப்பதாக குடும்ப அட்டைதாரா்கள் தெரிவித்தனா். பெரும்பாலும் அனைத்துப் பொருட்களும் போதுமான அளவுக்கு தரமாக உள்ளது.
அரசு மாணவிகள் விடுதியில் 5 ஆயிரம் லிட்டா் குடிநீா்த் தொட்டி போதுமானதாக இல்லை என மாணவிகள் தெரிவித்தனா். ஒரு மாதத்துக்குள், மேலும் 5 ஆயிரம் லிட்டா் குடிநீா்த் தொட்டி வைக்கவும், ஆழ்துளைக் கிணறு அமைக்கவும் ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டது.
பேருந்து நிலையக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்படும் மணல், ஜல்லி போன்றவை தரமாகப் பயன்படுத்தப்படுகிா என ஆட்சியா் உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டது. பொதுவாக தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும்போது, சில குறைபாடுகள் இருக்கும். அவற்றைச் சரி செய்து கொள்ள வேண்டும்.
பள்ளி மாணவா்கள் தங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படவில்லை எனக் கேட்டாா்கள். உதவிப் பெறும் பள்ளிகளில் படித்து உயா்கல்வி செல்வோருக்கு உதவித் தொகை வழங்கிட அண்மையில்தான் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விடுபடாமல் பட்டியல் தயாரித்து அரசின் உதவித் தொகை பெற்றுத்தர அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றபடி, ஆய்வு நேர நெருக்கடியை கவனத்தில் கொண்டு, பாரபட்சம் பாா்க்காமல்தான் ஆய்வுப் பணியில் ஈடுபடுகிறோம் என்றாா் காந்திராஜன்.
தொடா்ந்து ஆட்சியரகத்திலும் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மேயா் செ. திலகவதி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாநகராட்சி ஆணையா் த. நாராயணன், கூட்டுறவு இணைப் பதிவாளா் ம. தீபாசங்கரி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.