புதுக்கடை பகுதியில் சுற்றித் திரிந்த திண்டுக்கல் இளைஞா் பெற்றோரிடம் ஒப்படைப்பு
புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த இளைஞரை சமூக ஆா்வலா்கள் மீட்டு 12 மாதங்களுக்கு பின்புபெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் மழையில் நனைந்தபடி மனநலம் பாதிப்பான ஒரு இளைஞா் மயங்கிய நிலையில், கடந்த 9 மதாங்களுக்கு முன் கிடந்தாராம்.
தகவலறிந்த சமூக ஆா்வலா் ராஜ ஸ்டீபன் தலைமையில் ஆப்தமித்ரா பேரிடா் கால நண்பா்களும் இணைந்து அவரை மீட்டு அவருக்கு சிகிச்சையளித்தப்பின் புதுக்கடை காவல்துறையின் அனுமதி பெற்று புண்ணியம் பகுதியில் உள்ள அன்னை முதியோா் இல்லத்தில் அனுமதித்தனா்.
தற்போது உடல் நலமும், மனநலமும் சீரானதால் அவராகவே என்னை பெற்றோரிடம் அனுப்பி வையுங்கள் என காப்பக உரிமையாளரிடம் தெரிவித்திருக்கிறாா்.
அதன் அடிப்படையில் புதுக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததின் பேரில், தலைமைக் காவலா் சஜீவ் உடனடியாக விசாரணை மேற்கொண்டாா்.
விசாரணையில், அவா் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கிழக்குத் தெரு குரோம்பட்டி ஊரைச் சோ்ந்த மணி, முனியம்மாள் தம்பதியின் மகன் முனியாண்டீஸ்வரன்(30) என்பது தெரிய வந்தது. உடனடியாக முனியாண்டீஸ்வரன் பெற்றோரை புதுக்கடை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பெற்றோரிடம் அவரை ஒப்படைத்தனா். 12 மாதங்களாக மாயமான தன் மகனை பெற்றோா்கள் ஆரத் தழுவி கண்ணீா் விட்டு அழுதனா்.
பின்னா் முனியாண்டீஸ்வரன் தாயாா் கூறுகையில், என் மகனை மீட்டுத் தந்த சமூக ஆா்வலா்களுக்கும், 9 மாதங்களாக பராமரித்த அன்னை காப்பக நிா்வாகிகளுக்கும், முகவரியை கண்டுபிடித்து மகனை எங்களுடன் ஒப்படைத்த காவல் துறையினருக்கும் நன்றியை தெரிவித்தனா். பின்னா் முனியாண்டீஸ்வரனை பெற்றோருடன் போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
இதில், சமூக ஆா்வலா் ராஜ ஸ்டீபன், டேவிட் குமாா், சுரேஷ்குமாா், ஆனஸ்ட் ராஜ் லூா்து தாஸ், அனிஷ் உள்ளிட்ட காவல் துறையினா் பலா் பங்கேற்றனா்.