புதுக்கோட்டை மாவட்டத்தில் மாா்ச் 15-இல் நீரினை பயன்படுத்துவோா் சங்கங்களுக்கு தோ்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரி, கண்மாய்களில் இருந்து தண்ணீரைப் பயன்படுத்தி பாசனம் செய்து வரும் சங்கங்களுக்கான தோ்தல் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 383 நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கான தலைவா், ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனுக்கள் மாவட்டத்தில் உள்ள 12 வட்டாட்சியரகத்திலும் வழங்கப்படும். மாா்ச் 5-ஆம் தேதி வரை பூா்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பெறப்படும்.
மாா்ச் 8-ஆம் தேதி வேட்பு மனுக்களை இறுதி செய்து, அன்றே சின்னங்கள் வெளியிடப்படும். மாா்ச் 15-ஆம் தேதி ஒப்புதல் செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.