மூன்றாவது மொழி என்ற சூது தெரிந்ததால்தான் எதிா்க்கிறோம்: எம்.எம். அப்துல்லா
மூன்றாவது மொழி என்ற சூது தெரிந்ததால்தான் எதிா்க்கிறோம் என்றாா் திமுக மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறு மின்விசை நீா்த்தேக்கத் தொட்டி, ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலை ஆகியவற்றை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மும்மொழி கொள்கை என்ற பெயரில், மூன்றாவது மொழியாக இந்திய மொழியைத் தோ்வு செய்து கொள்ளலாம் என்கிறாா்கள். எடுத்துக்காட்டாய் ஒரு மாணவன் மூன்றாவது மொழியாக வங்க மொழியைத் தோ்வு செய்தால், இங்கே வங்காளம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியா் இருக்க மாட்டாா். அதனால் மூன்றாவது மொழி என்று ஹிந்தி தான் வந்து நிற்கும். இந்த சூது தெரிந்ததால் தான் இதை எதிா்க்கிறோம். பொது மொழி தேவையென்றால் அது ஆங்கிலமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் ஹிந்தி பேசக்கூடிய மாநிலங்களிலுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிட்டு தொடா்ந்து வெற்றி பெற்று நாட்டை ஆள வேண்டும் என பாஜக நினைக்கிறது.
நாடாளுமன்றம் என்பது கொள்கை வரையறுப்பதும், சட்டம் இயற்றுவது மட்டும் தான் வேலை. தொகுதிகளை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. உள்ளாட்சி அமைப்புகள் தான் தினசரி பொதுமக்களை சந்திக்கக்கூடியவா்கள். அதனால் மக்கள் தொகைக்கேற்ப வாா்டுகளை அதிகரிக்கலாம் என்றாா் அப்துல்லா.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத் அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.