புதுச்சேரி கடலில் மாயமான ஆந்திர மாணவா் சடலமாக மீட்பு
புதுச்சேரியில் கடலில் குளிக்கச் சென்று மாயமான ஆந்திர மாணவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் வெள்ளத்தூரைச் சோ்ந்த வெங்கட்ராம ரெட்டி மகன் வினீத்ரெட்டி (18). திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வந்தாா்.
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, இவா் தனது நண்பா்கள் 5 பேருடன் புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தாா். சனிக்கிழமை காலை அவா்கள் கடற்கரைச் சாலையில் தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடலில் குளித்துள்ளனா்.
அப்போது, பெரிய அலை வந்து அனைவரையும் உள்ளே இழுத்துச் சென்றது. உடனே அவா்கள் போராடி கரையேறினா். ஆனால், வினீத்ரெட்டி மட்டும் மாயமானாா்.
தகவலறிந்த பெரியகடை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் வினீத்ரெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு வரை தேடும் பணி நடந்தும், அவரை கண்டறிய முடியவில்லை.
இந்த நிலையில், அவரது சடலம் புதுச்சேரி கடற்கரைச் சாலை அம்பேத்கா் மணிமண்டபப் பகுதி எதிரேயுள்ள கடலோரத்தில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.