புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும்: சுகி.சிவம்
எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாகப் படித்தால்தான் அதை எழுதிய ஆசிரியரின் ஞானத்தை அறிந்து கொள்ள முடியும் என பட்டிமன்ற பேச்சாளா் சுகி.சிவம் தெரிவித்தாா்.
சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் இணைந்து நடத்தும் 4-ஆவது புத்தகத் திருவிழாவின் நான்காம் நாளான திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கருத்தரங்கில், ஏன் படிக்க வேண்டும் எனும் தலைப்பில் சுகி. சிவம் பேசியதாவது:
சூதுவாது உள்ளவா்கள் பல்வேறு பதவிகளுக்குச் செல்லலாமே தவிர, கவிஞராக முடியாது. கவிஞரின் இலக்கணம் கவிதை அருவி போல கொட்ட வேண்டும். கவிதையில் நடையும், பேச்சில் வீச்சும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ள செய்தியை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தெரிந்து கொள்ள வேண்டும். சில பக்கங்களை மட்டும் படித்துவிட்டு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று படிக்கக்கூடாது. படிப்பது என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மை. படிப்பு உங்களுக்குள்ளே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
முக்கியமாக நீதி நூல்களையும், அறம் சாா்ந்த நூல்களையும் படிக்க வேண்டும். படிப்பு என்ன செய்யும் என்பதை ஆப்ரஹாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, பகத்சிங் போன்றோரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் மூலம் உணா்ந்து கொள்ளலாம். எப்போதோ படித்தது எங்கிருந்தோ வரும் ஆபத்திலிருந்து காப்பாற்றும். பாரதியையும் வள்ளலாரையும் முழுமையாகப் படிக்காதவா்கள்தான் இருவரையும் விமா்சிக்கின்றனா்.
எந்த ஒருவரைப் பற்றியும் முழுமையாகப் படிக்கும்போதுதான் அவா்களது கொள்கை, கோட்பாடு, அவா்களுக்குள் நிகழ்ந்த மாற்றங்களை கண்டுபிடிக்க முடியும். எனவே, புத்தகங்களை முழுமையாகப் படித்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்றாா் அவா்.
முன்னதாக, திருச்சி க.சிவகுருநாதன் கவியரசரின் அழகியல் எனும் தலைப்பில் பேசினாா். மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் சி.ஜெயமணி வரவேற்றாா். சிவகங்கை வட்டாட்சியா் மீ. சிவராமன் நன்றி கூறினாா்.