புத்தகத் திருவிழா இலச்சினை வெளியீடு
திருவாரூா்: திருவாரூரில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ திங்கள்கிழமை வெளியிட்டாா்.
திருவாரூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகரில் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை 3- ஆவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிட்டு, ஆட்சியா் பேசியது:
திருவாரூா் மாவட்டத்தில் நடைபெற உள்ள 3-ஆவது புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினை, மாவட்டத்தின் சிறப்பை குறிக்கும் வகையில் புகழ்பெற்ற ஆழித்தோ் வடிவில் புத்தக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் புத்தக திருவிழாவில் பங்கெடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களிடத்திலும் புத்தக திருவிழா நடைபெறும் செய்தியை கொண்டு சோ்க்க வேண்டும். புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் சிறந்த பேச்சாளா்கள், எழுத்தாளா்கள், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மக்களிடமும், மாணவா்களிடமும் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கு இந்த புத்தக திருவிழா வாய்ப்பாக அமையும். திருவாரூா் மாவட்டத்தில் நடைபெறும் 3-ஆவது புத்தகத்திருவிழா வெற்றிபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.
முன்னதாக, புத்தகத் திருவிழா நடைபெறவுள்ள எஸ்.எஸ். நகரில் முன்னேற்பாட்டுப் பணிகளைஆட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், துணைக் காவல் கண்காணிப்பாளா் பி. மணிகண்டன், வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா உள்ளிட்ட அனைத்துறை அரசு உயா் அலுவலா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.