ரிப்பன் மாளிகையில் தேசியக் கொடியேற்றிய மேயா்: அலுவலா்களுக்கு ‘வாக்கி டாக்கி’ வழ...
புயலால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கக் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் சேதமடைந்த தென்பெண்ணையாறு, வடக்கு மலட்டாறு, பம்பை வாய்க்கால் உள்ளிட்டவற்றை சீரமைக்க வேண்டும் என்று விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பா் 30, டிசம்பா் 1-ஆம் தேதிகளில் ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தென்பெண்ணையாறு, வடக்கு மலட்டாறு, பம்பைவாய்க்கால் ஆகியவை முற்றிலும் சேதமடைந்தன.
விழுப்புரம் தொகுதியில் பொய்யப்பாக்கம், பூவரசன்குப்பம், பஞ்சமாதேவி, முத்தாம்பாக்கம், கோலியனூா் ஆகிய 5 கிராமங்களிலுள்ள ஏரிகள் உடைந்து, விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.
தளவனூா், அரசமங்கலம், சின்னக்கள்ளிப்பட்டு கிராமப் பகுதிகளில் தென்பெண்ணையாற்றின் கரை உடைந்து, வெள்ள நீா் ஊருக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வடக்கு மலட்டாறில் ஏற்பட்ட வெள்ளத்தால் கொங்கரங்கொண்டான், திருப்பாச்சனூா், பில்லூா், சோ்ந்தனூா் உள்ளிட்ட கிராமங்களில் ஆற்றின் கரை உடைந்து சேதத்தை ஏற்படுத்தியது.
எனவே, இந்த நீா்நிலைகளின் சேதங்களை விரைந்து செப்பணிட வேண்டும். மேலும், கோலியனூா் ஒன்றியம், தளவானூா் ஊராட்சியில் தென்பெண்ணையாற்றில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்ததால் வெள்ளநீா் ஊருக்குப் புகாமல் இருக்க சுமாா் 300 மீட்டா் நீளத்துக்குத் தடுப்புச்சுவா் கட்டித் தர வேண்டும். மேலும், புதிய தடுப்பணைக் கட்ட வேண்டும்.
இதுகுறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.