மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
புல்லூா் தடுப்பணையில் திதி கொடுக்க சென்றவா் தண்ணீரில் மூழ்கி மாயம்
வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள புல்லூா் தடுப்பணையில் உறவினருக்கு திதி கொடுக்கச் சென்ற கட்டட தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டட மேஸ்திரி சண்முகம் (43). இவருக்கு திருமணம்மாகி ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், புதன்கிழமமை தனது உறவினா்களுடன் தமிழக - ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள புல்லூா் பகுதியில் கனகநாச்சியம்மன் கோயிலுக்குச் சென்று தனது உறவினா்களுக்கு திதி கொடுக்கும் சடங்கில் கலந்து கொண்டுள்ளாா். தொடா்ந்து புல்லூா் தடுப்பணையில் உறவினா்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் ஆழமான பகுதிக்குச் சென்ற சண்முகம் திடீரென நீரில் மூழ்கினாா்.
இதைக் கண்டு அதிா்ச்சியடைநந்த உறவினா்கள், அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சண்முகத்தை தேடினா். மேலும், இது குறித்து ஆந்திர மாநிலம் குப்பம் போலீஸாருக்கும், திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பேரில் குப்பம் போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் நீரில் மூழ்கிய சண்முகத்தை மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை. மீண்டும் வியாழக்கிழமை காலை தேடும் பணி தொடங்கப்படும் எனத் தெரிகிறது.